Sunday, 25 July 2010

ஐந்திணைத் தன்மை கொண்டாள்; தமிழ்கூறும் மங்கைநல்லாள்..!

கல்லூரியில் ஒருநாள் தேனீர் இடைவேளையின்போது தோழி ஒருத்தி தன்னுடைய புதிய நோட்டுப்புத்தகம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள். அது ஐந்து பகுதிகளாகப் பகுக்கப் பட்டிருக்கும், தற்போது கடைகளில் பரவலாகவும் அதிகமாகவும் விற்பனையாகும் "5 சப்ஜெக்ட் நோட்". ஐந்து பகுதிகளையும் தனித்தனியாகப் பிரிக்கும் வண்ணம் அவற்றின் இடையே ஒரே வண்ணத்தில் தடிமனான அட்டைகள் புகுத்தப்பட்டிருக்கும். என் தோழி அந்த ஐந்து அட்டைகளிலும் ஒவ்வொரு கவிதைகள் எழுதித் தரும்படியும், அதை அவள் என் நினைவாக வைத்துக்கொள்ளப் போவதாகவும் கூறினாள்.

நான் சற்று வித்தியாசமாக யோசிக்க ஆரம்பித்தேன். "ஐந்து" என்றவுடன் எனக்கு அகத்திணைகள் ஐந்தும் நினைவுக்கு வந்தன. ஆகவே ஒன்று செய்ய முடிவெடுத்தேன். அகத்திணைகளின் கருப்பொருட்களைப் பெண்ணின் உடல், உள்ளக் குணாதிசயங்களுடன் ஒப்பிட்டு எழுதினால் சரியாக இருக்கும், ஒரு பெண்ணாக என் தோழியும் மகிழ்ச்சி அடைவாள் என்று எனக்குத் தோன்றியது.

அகத்திணைகளுடன் தொடர்புடையது என்பதால் கொஞ்சம் மரபு சார்ந்து எழுதலாம் எனத் தோன்றியது, ஆனால் கொஞ்சம் படப்படப்பாகவும் இருந்தது. தப்பும் தவறுமாக எழுதிவிட்டால்? ஆகவே, அசை சீர் அடிகள் ஆகியவற்றில் பெரிய சாதனைகள் இல்லாவிட்டாலும், ஓசை நயமும் எதுகை மோனை நயமும் சிறிது புலப்படும் வண்ணம் ஐந்து கவிதைகள் எழுதினேன். இந்தத் தொகுப்புக்கு நான் இட்ட தலைப்புதான் இந்தப் பதிவின் தலைப்பு."ஐந்திணைத் தன்மைகொண்டாள்; தமிழ்கூறும் மங்கைநல்லாள்." படித்துவிட்டு, குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நிறை இருந்தால் பாராட்டுங்கள்.

1. குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்.

" குணத்தால் பொருப்பென வுயர்ந்து இலங்குபல்
கணத்தாள் குமரன் தண்ணிலந் தனையொத்து
சுணங்கா முகப்பசுமை தருக்களின் முருகையொக்க
மணங்கொள் கொன்றைபோல நகையுடை யாள்அணங்கு."

குறிப்பு: பல்கணத்தாள் குமரன் - முருகன் - குறிஞ்சி நிலத் தெய்வம்; பொருப்பு - மலை; தருக்கள் - மரங்கள்; கொன்றை - குறிஞ்சிநில மலர், முருகனுக்குரியது. அணங்கு - பெண்.

2. முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்.

"கானகத் தருக்களொத்த கனங்குழல் தன்னழகும்
மானழுக் காறுறும் குவளைமலர்க் கண்ணழகும்
பானிறக் கடலின்மிசை அரவணை கொண்டமாயோன்
வானுயர் அருளழகும் ஒருங்குடை யாள்அணங்கு."

குறிப்பு: கானகம் - காடு; மான் - முல்லைநில விலங்கு; பானிறக் கடலின்மிசை அரவணை கொண்டமாயோன் - பாற்கடலில் உறங்கும் திருமால் - முல்லைநிலத் தெய்வம்; அருள் - கருணை.

3. மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்.

"உழவ ரகழினும் நோற்கும் மூதூர்
யாழது செய்யும் இன்னிய மெல்லிசை
அழகிய நாரை தன்னுடை மடநடை
கழுநீர் மென்மை என்றிவை நான்கும்
நன்மனம் நல்லுரை மென்னடை யாக்கை
என்பன தன்னிற் கொண்டாள் அணங்கு."

குறிப்பு: உழவர் - மருதநில மக்கள்; அகழ்தல் - தோண்டுதல்; மூதூர் - மருதநில ஊர்ப் பெயர்; இங்கு நிலத்துக்கு ஆகுபெயராக வந்தது; யாழ் - மருதநில இசைக்கருவி; நாரை - மருதநிலப் பறவை - நேர்க்குறிப்பாக அன்றி, பிறிதுமொழிதலாக வந்தது; செங்கழுநீர் - மருதநில மலர்; யாக்கை - உடல்.

4. நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்.

" காகத் தூவி கனங்குழல் மேவத்
தாகம் தீர்க்கும் வருணன் செல்வி
வேகந் தன்னிற் சுறாவ தொக்கும்
அகத்திணை யைந்தும் உவப்பவள் அணங்கு."

குறிப்பு: காகம் - நெய்தல்நிலப் பறவை; வருணன் - கடலோன் - நெயதல்நிலக் கடவுள்; செல்வி - புதல்வி, மகள் - வருணனின் குணம் உடையவள் என்ற பொருளில் வந்தது; சுறா - நெய்தல்நில விலங்கு - செயல்வேகத்துக்கு உவமேயமாக வந்தது.

5. பாலை - முல்லையும் மருதமும் நிலையிற்றிரிந்து பாலைவனமானது.

"வழிப்பறிப் பவர்போல் மனம்பறி எயினி
இழியவை செய்யாள் உரத்திற் கொற்றவை
அழிவியற் செந்நாய் போன்றன எரிப்பாள்;
ஒழுக்கம் உயிரெனக் கொண்டவள் அணங்கு."

குறிப்பு: வழிப்பறித்தல் - பாலைநிலத் தொழில்; எயினியர் - பாலைநிலப் பெண்கள்; 'மனத்தைக் கொள்ளை கொள்பவள்' என்ற பொருளில் வந்தது; கொற்றவை - பாலைநிலத் தெய்வம்; உரம் - வீரம்; செந்நாய் - பாலைநில விலங்கு.

நன்றி.
என்றும் தோழமையுடன்,
ருத்திரன்மகன் இவன் பைரவன்.