Wednesday 12 May 2010

பெண்மையே உன்றன்முன்னே...

கல்லூரிப்பருவத்தில் பலருக்கும் இருக்கும் கவிதை எழுதும் விருப்பம் - அதுவும் காதல் கவிதை எழுதும் விருப்பம் எனக்கும் இருந்தது. எழுத ஆரம்பித்தது என்னவோ முதுகலைப்படிப்பின்போது தான், ஏனெனில் அப்போதுதான் படிப்புக்கப்பாற்பட்டு பெண்களுடன் பழகும் முதல் வாய்ப்பு நேரிட்டது (எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலையில் பெண்களுக்கு அனுமதி இல்லை, இன்றுவரை!). "நீ நன்றாக கவிதை எழுதுவாய் என்று நினைக்கிறேன்" என்று சொன்ன தோழியில் இருந்து, "அவன் எழுதுவானாயிருக்கும், யாருக்குத் தெரியும் எந்தப் புற்றில் எந்தப் பாம்புன்னு, என்னடி?" என்று கேலியாகக் கூறிய அந்தத் தோழி வரைக்கும் எண்ணை எழுதத் தூண்டியவர்கள் பலர்.

"எழுதித்தான் பார்ப்போமே!" என்று எண்ணத்தொடங்கியபோது தான் பார்க்கும் எல்லாவற்றைப்பற்றியும் கவிதை எழுதத் தோன்றியது. அந்த நேரத்தில் தான் வைரமுத்து, வாலி முதல் அறிவுமதி, யுகபாரதி, தாமரை, தபூ சங்கர்,வரை எத்தனையோ கவிஞர்களைப் படிக்கத் துவங்கினேன். எதில் பார்த்தாலும் கவிதை ஒளிந்திருப்பதாகப் பட்டது. ரோட்டோரமாக பூ விற்கும் பெண், ஒற்றைக்கையில் டவுசரைத் தூக்கிப் பிடித்தபடி டயர் ஓட்டும் சிறுவன், அவன் பின்னாலேயே ஓடும் அவனது நாய், இன்னும் எத்தனையோ.

ஆனால் துவக்கம் முதலே எனக்குத் தயக்கம் இருக்கத்தான் செய்தது. நானே பலமுறை கவிதை எழுதுவதை விமர்சித்திருக்கிறேன், கண்டித்திருக்கிறேன். "பிளாட்டோவைப் படித்திருக்கிறோம்" என்ற ஒரே காரணத்துக்காக, "கவிஞர்களையும் கவிதைகளையும் புறக்கணிக்க வேண்டும்" என்பேன். "அவர்கள் எல்லாம் பொய்யர்கள்" என்பதும் உண்டு, அதே பிளாட்டோவைக் கடன்வாங்கிக் கொண்டு. ஆனால் தமிழிலக்கியம், தமிழ்க்கவிதைகள், மரபுக்கவிதைகளை மட்டும் பிடிக்கும். முரண்பட்டதாக இல்லை?

புதுக்கவிதைகளோ நவீன கவிதைகளோ பிடிக்காமல் இருந்த எனக்கு அவற்றின்மீது ஈர்ப்பு ஏற்பட்டதே ஒரு அசாதாரணமான திருப்பம். ஒருமுறை அடிக்கடி கவிதைகள் எழுதும் என் தோழி ஒருத்தி தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு கவிதை தொகுப்பைக் கொடுத்தாள். அதன் பெயர் "கொலுசுகள் பேசக்கூடும்" என்பது. எழுதியது ஒரு திரைப்பட இணை இயக்குனர் - பெயர் மறந்துவிட்டது. அதை வாங்கிப் போய் இரவுமுழுவதும் ஒருவரி கூட விடாமல் படித்தேன் (அதை நான் அடுத்தநாளே திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்தது என்பது வேறுவிஷயம், ஏனெனில் அவளே அதை தன்னுடைய வேறொரு தோழியிடம் இருந்து இரவல் வாங்கியிருந்தாள்). நன்றாகத்தான் இருந்தது. அதுவரை நான் படித்திருந்த ஒரே காதல் கவிதைத் தொகுப்பு அதுதான். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாகத் தோன்றியது.

கவிதைகளை மிகச் சிறந்த முறையில் விமர்சனம் செய்யுமளவுக்கு நான் அப்போது இலக்கியம் படிக்கவில்லைதான் - இருந்தாலும் ஒரு சராசரி ஆடவனுக்கு அவை போதும். அந்தக் கவிதைகளில் இருந்த காதலன் அந்த இணை இயக்குனர் இல்லை - ஒவ்வொருவரும். நான், அவன், இவன் எனப் பெரும்பாலான இளம் ஆண்கள். வசந்தபாலன் திரைப்படங்களில் வருவார்களே - அப்படி. படிக்க படிக்க என்னையே நான் அவனில் கண்டேன், தொலைந்தேன் எனக்கூடச் சொல்லலாம். தொலைக்காட்சிக்குள்ளும் கணினித்திரைக்குள்ளும் சுருங்கிவிட்ட இன்றைய உலகில் ஒரு ஆடவன் தன் காதலைச் சொல்லச் சிலப்பதிகாரம் தேவையில்லை - ஒருவரிக் கவிதை போதும்.

ஆனால், எழுதும் எழுத்தில் சிறிதாவது முதிர்ச்சி இருக்க வேண்டுமே? "அதோ பாரு ஆயா, ஆட்டுக்காலு பாயா" என்று எழுத உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கொட்டிக்கிடக்கின்றனர். வயதுக்கும் படிப்புக்கும் ஏற்ற முதிர்ச்சி இருக்கவேண்டும் என்று விரும்பினேன். "வார்த்தையில் விளையாட வேண்டும், எளிமையாக இருக்கவேண்டும், கொஞ்சமாவது எதுகை-மோனை இருந்தால் தான் தரை டிக்கெட்டுகளுக்கு அது கவிதை போல் தெரியும்" என்று பலவாறாக எண்ணிக்கொண்டு, பாரதியாரையும் பாரதிதாசனையும் விழுந்து விழுந்து மாய்ந்து மாய்ந்து படிக்கத் துவங்கினேன். எங்கள் நூலகத்தில் இருந்த "பாரதியார் கவிதைகள்" நூல் நூலக அடுக்கில் இருந்ததை விட எனது புத்தகப் பையிலும், ஷெல்பிலும்தான் அதிகமாக இருந்தது. இடைவேளை ஒன்று விடக்கூடாது, உடனே புத்தகத்தை எடுத்துக் கொண்டு "கண்ணம்மா"வைத் தேடப் போய்விடுவேன். ஆனால் அதுவும் ஒருவகையில் நல்லதாகத் தான் அமைந்தது, "பாஞ்சாலி சபதம்" போன்ற அவரது சிறந்த பல படைப்புகளை நான் படிக்காமலே போயிருந்திருப்பேன் - எவ்வளவுதான் துவக்கம் முதலே அவர்மீது ஈர்ப்பும் மதிப்பும் இருந்தபோதிலும்.

அந்தக் காலகட்டத்தில் நான் எழுதிய பல கவிதைகளில் சந்தமும் எதுகைமோனையும் கோலோச்சும். திருக்குறளை வேறு படித்துவைத்துக் கொண்டு, அதிலிருந்து சொற்களைப் பயன்படுத்துவது (எப்பூடி? நாங்க யாரு தெரியும்ல...). குறுந்தொகை, அகப்பாடல்கள் என எதையும் விடுவதில்லை. "யாயும் ஞாயும்" என்பதைப்போய் வகுப்புத் தோழிகளிடம் ஸீன் போடுவது - என் மாணவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. அப்படி ஒருநாள் நான் எழுதியது தான் கீழே வரும் பாடல். "பையன் சமர்த்தாக குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறான்" என்று விரிவுரையாளர் எண்ணிக்கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த துண்டுச் சீட்டில் மலர்ந்த காதல் கவிதை அது. புதுக்கவிதையானாலும், பாரதியாருடையவை யாப்பிலக்கணத்துக்கு உட்பட்டவை. இதில் அப்படி எதையும் பார்க்க முடியாது, ஆனாலும் ஓசை நயம் நன்றாக இருக்கும், பாருங்களேன்.

பெண்மையே உன்றன்முன்னே...

சோதிமுகங் கண்டிடவே - என்றன்
உள்ளமலை பாயுதடி!
பாதியடி என்னுயிரில் - உன்றன்
கள்ளநகை கண்மயக்க
மோதியடிக் குதென்மனம் - உன்னைக்
கண்டவி நாடியிலே;
ஓதிக்கொண் டேயிருந்தேன் - உன்றன்
வண்ணமுறு பேர்தனையே.

அண்மையில் நீயிருந்தால் - கண்ணே
அகிலமும் மறந்துபோனேன்;
பெண்மையே உன்றன்முன்னே - செல்வஞ்
சகலமு மொன்றுமில்லை.
தண்மையாய் நீயுகுக்கும் - அந்தத்
தேன்சுவைச் சொற்களுக்கே
உண்மையா யண்டத்திலும் - நிகர்
இன்சுவை யமிழ்தமில்லை.

சேணுல கேட்டுகின்றேன் - உன்றன்
கைதொடும் நிமிடங்களில்;
வேணுகோ பாலனைப்போல் - நின்றன்
வெட்கம் பருகுகின்றேன்.
நாணுதல் உன்சிறப்பு; - சசியைக்
காண்கிறே னுன்முகத்தில்;
வாணெடுங் கண்ணழகே! - உனைக்
காண்தொறு மின்பமடி.

பொற்சிலை யுன்றன்மேனி; - அழகுக்
கண்டமது சங்குமலர்;
சிற்சில முத்துதிரும்; - கோவைச்
செவ்வாய் நீதிறக்க.
காற்சலங் கையஞ்சிடும்; - தேவி
பாதங்கள் பூமிதொட;
அர்ப்பண மென்றனாவி - என்னை
யாளுமுன் அன்பினுக்கே.

சற்றே கண்ணயர்வேன் - உன்றன்
தீங்குரல் கானத்துடன்;
பொற்றேர் மேனியுடை - மெல்லிய
பஞ்சுபோன் மடியின்கண்ணே.
கற்றைக் குழல்கோதி - அன்புத்
தாதைநா னாகிடுவேன்;
அற்றைத் திங்களினில் - ஆசைக்
காதலனா னாகிடுவேன்.