கல்லூரியில் இருந்தபோது ஏறக்குறைய அனைவரையும் போல நானும் கவிதை எழுத முயன்றதுண்டு. ஆனால் அவை அனைத்தும் வழக்கம் போல எல்லாரும் எழுதும் காதல் கவிதைகளாகத்தான் இருந்தன, நான் எனது சமூகக் கடமைகளைச் சரிவர உணரும்வரை.
எனது முதுகலைப் படிப்பின் பிற்பகுதியில்தான் நான் அதிகமாகச் சமூக ஆர்வம் கொண்டவனாகக் காணப்பட்டேன். அதுவரை, குருதிக்கொடை கூட என்.எஸ்.எஸ்.-இல் கிடைக்கும் பத்து அல்லது பதினைந்து கிரெடிட்டுக்காகத்தான் இருக்கும். அது மட்டுமல்லாமல், கூட இரண்டோ மூன்றோ கிரெடிட் கிடைக்கும் என்றால், ஒரே வாரத்தில் மூன்று முறை கூட ரத்தம் கொடுக்கக் கூடத் தயாராக இருப்போம். ஒரு வாரம் என்ன - ஒரே நாளில் இரண்டு முறை குருதிக்கொடை கொடுத்த பிறவிகள் கூட உண்டு!
ஆனால், சட்டென்று ஞானோதயம் பிறந்துவிட்டதால் அல்ல, நெடுநாள் மனதுக்குள் பூட்டியே வைத்து இருந்த என் சமூக ஆர்வத்தை வெளிப்படுத்த எனது டீக்கடை நண்பர்கள் வாய்ப்புக் கொடுத்தபோதுதான். வெளியுலகத்துக்கும் அங்கு மினிபஸ் பிடிக்க நிற்பவர்களுக்கும் அவர்கள் டீக்கடைத் திண்ணையில் அமர்ந்துகொண்டு அரட்டை அடிப்பவர்கள் தான் - நானும் அப்படித்தான் எண்ணிக்கொண்டு இருந்தேன், அந்த முதல் மனிதச் சங்கிலிப் போராட்டம் வரை. இலங்கையில் அப்போது நடந்துகொண்டிருந்த இனவெறிப்போரைத் தடுத்து
நிறுத்தக் கோரியும், இந்திய அரசு அனுப்பிக்கொண்டிருந்த ஆயுத - இராணுவ உதவிகளை உடனே நிறுத்தக் கோரியும் நடத்தப்பட்ட போராட்டம் அது.
அது மட்டும் அல்ல, மனித உரிமைகளுக்கு எதிரான எந்த ஒரு உணர்வுகளையும் மனதுக்குள்ளேயே வைத்திருக்க மட்டுமே பழகிய என்னை வீதியில் இறங்கிப் போராடத்தூண்டியது முத்துக்குமார் என்ற சென்னை இளைஞனது உயிர்த்தியாகம்தான். 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் உயிர்ப்பந்தமாகச் சென்னை சத்தியமூர்த்தி பவன் முன் அவன் "ஈழம் வெல்க!" என்ற கோஷத்துடன் அவன் தரையில் சாய்ந்ததைத் தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. பகல்களிலும் இருண்டிருந்த தமிழகத்துக்கு ஒளியூட்டுவதற்காக தன்னையே தீப்பந்தமாக்கிய தமிழ்ப் போராளி. அவன் ஈழத்தைச் சேர்ந்தவனல்ல, ஆனாலும் எல்லா மனிதரையும் தன் சகோதரர்களாகப் பாவிக்கும் மனது அவனுக்கு இருந்தது. பிறர் துயரைத் தன் துயராக எண்ணும் பெருந்தன்மை இருந்தது. தன் சகோதரர்களின் இரத்தம் காரணமின்றிச் சிந்தப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டும் காணாதது போலப் போய்க்கொண்டிருந்த தமிழகத்தையும் அதன் மெத்தனத்தையும் எதிர்க்கும் துணிவும் ஆத்திரமும் இருந்தது. பாரதியின் வரிகளில் இருந்த ரௌத்திரத்தை அவன் பழகியிருந்தான்.
இறக்கும் முன் அவன் எழுதி, உழைக்கும் வர்க்கத்தினர் உள்ளிட்ட தமிழ் மக்களிடம் கையளித்துச் சென்ற அவனது உயிர்ப்புமிக்க மரணசாசனம், யாரையும் வீதியில் இறங்கிப் போராடத் தூண்டும். சோம்பிப்போய் உட்கார்ந்திருந்த தமிழகத்தின் இளைய தலைமுறையிடம் அவன் கேட்ட இறுதி ஆசை, ஒவ்வொரு சொட்டு இளம் ரத்தத்தையும் கொதிக்க வைத்தது. வீட்டுக்கு ஒரே மகனான அவன் செய்யும்போது, நமக்கென்ன குறை என்று ஒவ்வொரு மாணவனையும் அது எண்ண வைத்தது. அதுதான் என்னையும், முன் எப்போதும் இல்லாத விதமாக, என்னால் இயன்றவரை, என்னுடன் இருந்த மாணவர்களின் உதவியாலும், அவர்களின் வலிமையைக் கொண்டும் இது போராட்டங்களில் முழுமூச்சுடன் ஈடுபடத் தூண்டியது.
அந்தக் காலகட்டத்தில், எத்தனையோ மனிதச்சங்கிலிகள், ஊர்வலங்கள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், தர்ணாக்கள் என நடத்தினோம். பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். கையெழுத்து இயக்கங்கள் நடத்தினோம் - தெரிந்தவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என அனைவரிடமும் பேசினோம். எங்கள் வாராந்திர வான்குழுக் கூட்டங்களில்கூட இதை பற்றி அதிகம் பேசி, மாணவ சமுதாயத்திடையே விழிப்புணர்வைக் கொண்டுபோய்ச் சேர்த்தோம்.
அந்தக் காலகட்டத்தில்தான் "காதலும், காதல் நிமித்தமும்" என்ற எனது கவிதைக் கண்ணோட்டம், இலக்கியத்தின் மற்றொரு முகமான சமூகக் கடமைகளை நோக்கி என் கவனம் திரும்பியது. ஈழக் கவிஞர்கள் மட்டும் இல்லாமல், இன்னும் பல சமூக ஆர்வம் கொண்ட கவிஞர்களின் படைப்புகளைப் படிக்கத் துவங்கினேன். போராட்டங்களில் பேசும்பொது உணர்ச்சியைப் பெருக்க உதவும் என்ற நானும் கவிதைகள் எழுதத் துவங்கினேன். அவ்வாறு எழுதத் துவங்கியதன் விளைவாக எழுந்த என் முதல் குழந்தை இந்தக் கவிதை. இது பொதுக்கூட்டங்களிலும், நண்பர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஈழ விடுதலையின் அவசியம் குறித்த என் கருத்துக்களை எளிதில் பதிவு செய்யும் ஊடகமாக அமைந்தது.
படித்துவிட்டுப் பிடித்திருந்தால் (பிடித்திருக்காவிட்டாலும்) உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள், மறக்காமல்.
சுருதிபேதமும் சாக்காடும்
வெடிக்கும் துப்பாக்கிகளின்
ஒலியும்
குண்டுகளின் ஒலியும்
சற்றே ஒரு வினாடி ஸ்தம்பிக்கின்றன.
"வீல்!" என்ற அழுகையுடன்
தூக்கம் கலைகிறது,
அகதிகள் முகாமில்
எங்கள் கண்ணீரில் நனைந்த
தரையில் அதுவரை
தூங்கிப்போயிருந்த குழந்தை.
ஆம், இப்பொழுதெல்லாம்
எம் குழந்தைகளுக்குத்
தாலாட்டுப் பாடல்களை விட,
வெடிச்சத்தங்களின் சுருதிபேதம்
அவ்வளவு அத்துப்படி.
இதேபோன்ற ஒரு வெடிகுண்டுக்குத் தன்
இன்னுயிரைப் பரிசளித்து
வாடிய பூப்போல் அருகில் கிடந்த
தன் தோழியைப் பார்த்து
நெற்றி சுருக்குகிறது:
"இவள் ஏன் விழிக்கவில்லை?"
"குழிகளுக்குள்தான் செடிகள்
நடுவதா அம்மா?"
பாவம், மனிதர்கள் மறைந்துகொள்ளும்
பதுங்கு குழிகளைத் தவிர
வேறெதை அது பார்த்திருக்கிறது?
வேனிற்கால மரங்களையும்
செடிகளையும் அலங்கரிக்கும்
பட்டாம்பூச்சிகளின் சிறகடிப்புகள்
எங்கள் காதுகளுக்குக் கேட்பதில்லை.
அவை மிக மிக நுண்ணியவையாயிற்றே?
வெடிமருந்தின் வாசனையோ,
மலர்களின் நறுமணத்தைத்
தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது.
அன்பு, மகிழ்ச்சி, பாசம்
காதல், நன்றி, ரௌத்திரம் -
இவைகூட நுண்ணிய உணர்வுகள்தாம்.
எங்கள் இதயங்கள் இவற்றுக்கு
மரத்துப் போகும்முன்னாவது
போரை நிறுத்துங்களேன்...!